Saturday, December 13, 2014

  • December 13, 2014
  • askshrinivas
நண்டு மசாலா

இருமல், சளிக்கு நண்டை நல்லா காரமா வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்-னு சொல்வாங்க. அந்த நண்டை நல்லா காரமா, ஒரு மசாலா செஞ்சு சாப்பிடலாமா!!!

தேவையான பொருட்கள் :

நண்டு - ஒரு கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - இரண்டு ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
தனியாத்தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - அரைமூடி
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :

முதலில் நண்டை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேண்டிய அளவிற்கு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்ப்பூவுடன், மிளகு, சீரகத்தை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சோம்பைப் போட்டு பொரிய விடவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் போட்டு தேவையான அளவு தண்ணீரை விட்டு கிளறவும். பின் நண்டு, உருளைகிழங்கு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் உப்பு போட்டு பிரட்டி வேகவிடவும்.

சிறிது நேரம் கழித்து நண்டு வெந்த வாசனை வந்தவுடன் இறக்கி அதன்மேல் கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.

இப்போது சுவையான நண்டு மசாலா தயார். இதனை சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.

Popular Posts

Followers