Saturday, December 13, 2014

  • December 13, 2014
  • askshrinivas
அசாரி கோஸ்ட் (மட்டன்)


மழைக்காலம், குளிர்காலம் என்றால் காரசாரமான ரெசிபி எதாவது சாப்பிடணும் போல இருக்கும். அப்ப இந்த அசாரி கோஸ்ட் (மட்டன்) ரெசிபி ரொம்ப நல்லா இருக்கும். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

மட்டன் (1/2 இஞ்ச் எலும்புடன் கூடிய கறி) - 800 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
வரமிளகாய் - 8
கிராம்பு - 5
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 7 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு வரமிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம், கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, பின் அவற்றை குளிர வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

3. பின் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெயை ஊற்றி, வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி, இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

4. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அந்த பொடியை போட்டு சிறிது நேரம் நன்கு கிளரவும்.

5. அடுத்து அதில் கழுவிய மட்டனை சேர்த்து நன்கு பிரட்டவும். பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளரவும். அதில் ஊற்றிய எண்ணெயும், மசாலாவும் தனியாக பிரியும் வரை பிரட்ட வேண்டும்.

6. பின் அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி, மூடி போட்டு மூடிவிட்டு அரைத் தீயில் வைத்து மட்டன் வேகும் வரை வேக விடவும்.

7. மட்டன் வெந்ததும், அதில் எலுமிச்சைப்பழச்சாற்றை விட்டு கிளரி இறக்கி விடவும்.

8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை அதன் மேல் தூவி பரிமாறலாம்.
இதோ சுவையான, காரசாரமான அசாரி கோஸ்ட் ரெடி!!!

Popular Posts

Followers